நோன்பை முறிக்கும் விஷயங்கள் ஆறு

நோன்பை முறிக்கும் 6 விஷயங்கள்.




நோன்பை முறிக்கும் 6 செயல்கள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 

• இஸ்லாம் கூறும் அடிப்படைக் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும்! நோன்பு என்பது அல்லாஹ்வுக்காக சுபஹிலிருந்து மஃரிப் வரை உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல், ஆசைகள் என அனைத்தையும் தவிர்த்து இருப்பதை நோன்பு என்போம்!

• நோன்பை முறிக்க கூடியவைகளை அரபியில் ‘ முப்திலாதுஸ் ஸவ்ம் ’ (நோன்பை முறிப்பவை) கூறப்படும்! நோன்பை வைக்க கூடிய ஒவ்வொரு முஸ்லீமும் எந்த செயல்கள் செய்தால் நோன்பு முறிந்து விடும் என்பதை அறிந்து வைத்து இருக்க வேண்டும்! இன்ஷாஅல்லாஹ் அவற்றை பற்றி பார்ப்போம்!

1) கணவன் மனைவி சேர்வது :

• நோன்பை முறிக்கும் விஷயங்களில் இதுவே மிகவும் கடுமையானதும், மிகவும் பாவமான ஒரு செயலாகும். 

• ரமலானில் நோன்பு வைத்த நிலையில் வேண்டுமென்றே அல்லது சொந்த விருப்பப்படி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விந்து வெளியானாலும், வெளியாக விட்டாலும் நோன்பு முறிந்து விடும்.

• நோன்பு முறிந்தாலும் அவர் சூரியன் மறையும் வரை நோன்பை விட கூடாது அதன் பின்பு கடுமையான பரிகாரம் செய்ய வேண்டும்.

❤️ பரிகாரம் :

1) தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் அல்லது,

2) 60 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும்!

(நூல் : ஸஹீஹ் புஹாரி : 2600)

• கணவன் மனைவி சேர்வது தவிர, நோன்பை முறிக்கும் வேறு எந்த விஷயத்திற்கும் பரிகாரம் கிடையாது. 

2) வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல் :

• ஒருவர் அறியாத நிலையில் அல்லது மறதியாக உணவு அல்லது ஏதேனும் பானம் வாய் வழியாகவோ அல்லது மூக்கின் வழியாகவோ உடலினுள் சென்று விட்டால் நோன்பு முறியாது ஆனால் வேண்டுமென்றே இவ்வாறு நடந்தால் நம்முடைய நோன்பு முறிந்து விடும்!

(சூரத்துல் : அல் பகரா : 187)

• நாம் ஒழு செய்யும் பொழுது கூட கவனமாக ஒழு செய்ய வேண்டும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீ தண்ணீரை நன்கு மூக்கினுள் செலுத்திச் சுத்தம் செய்! ஆனால், நீ நோன்பாளியாக இருந்தாலே தவிர (அப்போது அவ்வாறு செய்யாதே)

(நூல் : சுனன் திர்மிதி : 788)

• வாசனை நுகர்வதால் நோன்பு முறியாது!

❤️ மறதியாக உண்ணுதல், பருகி விட்டால்?

• யார் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் மறதியின் காரணமாக சாப்பிடுகிறாரோ அல்லது தண்ணீர் பருகிவிடுகிறாரோ (அவர் மீது எந்த குற்றமும் இல்லை) அவரின் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும்!

• என்றாலும், அவருக்கு அவர் நோன்பாளி என்பது நினைவு வந்து விட்டால் அதை அப்படியே நிறுத்தி விட வேண்டும். மேலும் , வாயில் உள்ளவற்றை துப்பி விட வேண்டும்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் :

ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்! ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1933)

• மேலும், நோன்பாளி மறதியின் காரணமாக தண்ணீர் குடிப்பதையோ, சாப்பிடுவதையோ ஒருவர் பார்த்தால் அவருக்கு நோன்பாளி என்று நியாபகமூட்டுவது அவர் மீது கடமையாகும்!

3) உண்ணுதல் - பருகுதலுக்கு இணையானவை :

• சொட்டு மருந்து : நோன்பாளி மூக்கிற்கு (அ) காதுக்கு சொட்டு மருந்து விடுவதை முடிந்த அளவுக்கு தவிர்த்து கொள்ள வேண்டும்! 

• காரணம் : சொட்டு மருந்தின் சுவை மூக்கு வழியாக அல்லது காதின் வழியாக வயிற்றை அடைய வாய்ப்புள்ளது. அதன் சுவை தொண்டைக்குழியை அடையாமல் இருக்குமானால் அவ்வாறு செய்வது நோன்பை முறிக்காது ! ஆனால் தொண்டையினுள் சென்று விட்டால் நோன்பு முறிந்து விடும்!

(ஃபதாவா : ஷேக் இப்னு பாஸ் (ரஹ்) : 15 / 261)

• ஊசி மற்றும் குளுகோஸ் : உடல் சரி இல்லாதவர்கள் ஊசி போட்டு கொள்ள அனுமதி உண்டு அவரின் நோன்பு முறியாது!

• ஆனால் அந்த ஊசி போட்டால் உடலின் சக்தி அதிகரிக்கும் என்றால் நாம் ஊசி செலுத்திக்க கூடாது அல்லது நோன்பை விட்டு விட வேண்டும்! நோயாளிகளுக்கு நோன்ப விட அனுமதி உண்டு!

• குளுகோஸ் பொறுத்த வரை அதை நமது உடலில் செலுத்தினால் நோன்பு முறிந்து விடும் காரணம் அதை உடலில் ஏற்றினால் உடலின் சக்தி அதிகரிக்கும் அதனால் நோன்பு முறிந்து விடும்!

(லஜனதுத் தாயிமா லில்புஹுஸில் இல்மிய்யா வல் இஃப்தா : 5176)

4) வேண்டும் என்றே விந்து வெளியாக்குதல் :

• உடலுறவு அல்லாத வேறு வழிகளில் ஒருவர் இச்சையுடன் விந்தை வெளிப்படுத்தினால் அவரின் நோன்பு முறிந்து விடும்! அவர் அல்லாஹ்விடம் மனம் வருந்தி தவ்பா செய்ய வேண்டும் மேலும் முறிந்த நோன்பை மீண்டும் களா செய்ய வேண்டும்!

ஷேக் முகம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) கூறினார்கள் :

• ஒரு நபருக்கு கனவின் மூலம் விந்து வெளியாகினால் நோன்பு முறியாது ஆனால் இவை இல்லாமல் சுய இன்பம் மூலம் விந்து வெளியேறினால் நோன்பு முறிந்து விடும்! மீண்டும் அவர் நோன்பை களா செய்ய வேண்டும்! 

• ஆனால் அவர் பரிகாரம் செய்ய வேண்டிய தேவையில்லை! என்றாலும் அவர் அந்த பாவத்தில் இருந்து விலகி அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்!

(ஃபதாவா : அர்கானுல் ஈமான் : 2/661)

5) வேண்டும் என்றே வாந்தி எடுப்பது :

• ஒருவருக்குத் தானாக வாந்தி வந்தால் நோன்பை அது முறிக்காது! ஒருவர் தானாக முயற்சித்து வாந்தியெடுத்தால் அது நோன்பை முறிக்கும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யாருக்கு வாந்தி வந்ததோ அவர் அந்த நோன்பைக் கழா செய்ய வேண்டியதில்லை! யார் வேண்டுமென்றே வாந்தியெடுத்தாரோ அவர் அதை கழாச் செய்யட்டும்!

(நூல் : சுனன் திர்மிதி : 720)

6) ஹைலு அல்லது நிபாஸ் ஏற்படுதல் :

• ஒரு பெண்ணுக்கு நோன்பு வைத்த நிலையில் மாதவிடாய் அல்லது நிபாஸ் ஏற்பட்டு விட்டால் அவளின் நோன்பு அந்த நிமிடமே முறிந்து விடும்! அது பகலின் ஆரம்பமாக இருந்தாலும் சரி! சூரியன் மறைவதற்கு ஒரு நிமிடம் முன்னால் ஏற்பட்டாலும் சரி! விட்ட நோன்புகளை கணக்கு செய்த பின்னர் களா செய்ய வேண்டும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 560)♥️

Comments

Popular posts from this blog

Jummah small khutba tamil